என் வீடு -
வீட்டு முற்றத்தில்
விளைந்திருந்த செடி ஒன்று
சிறுக சிறுக நீரூற்ற
சீராய் வளர்ந்தது
சன்னம் சன்னமாய் கிளை விட்டு
சடுதியில் நின்றது.
ஒரு நாள் -
எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று
என் வீட்டுச் செடி மீது! - அது
எங்கோ சென்று சென்று வந்தது.
சிறகில் ஏதோ கொண்டு கொண்டு வந்தது.
பொழுதொரு வண்ணமாய் பட்ட ஒரு பாடு
பொற்கிண்ணம் போலே பொலிந்ததொரு கூடு!
ஒரு பொன் மாலைப் பொழுதினிலே
முட்டைகள் மூன்று முத்தாய் இட்டது பேடு
தடையேதும் செய்யாமல்
இடையூறும் இல்லாமல் - நித்தம்
தலை நீட்டி பார்த்துப் பார்த்து
தவித்ததும் என் பாடு.
ஒரு நாள் விடிகாலை
முட்டைகள் மூன்றும் முகிழ்ந்தவிந்து
அங்கே -
முத்தாய் குஞ்சுகள் மூன்று
செக்கச் சிவப்பாய் சிதறிக் கிடந்தன.
அலகோ அழகு
வெண் பட்டாய் சிறகு!
பட்டுப் போல் மேனி
தொட்டுவிட ஆசை -
பார்த்து பார்த்து மட்டும் - என்
(பரவசம் கைவசம்)
பரவசத்தைக் கூட்டும்!
பத்து நாள் கூட பறந்தோடவில்லை
முத்துக்கள் மூன்றும் மூப்பெய்தவில்லை
சட்டென ஒரு நாள்
சிட்டுக்கள் ஒவ்வொன்றும்
சிறகை விரித்தன
பெற்ற தாய்க்குருவி
வட்டமடித்து விட்டு - தன்
கூட்டைத் துறந்து விட்டு - தான் அங்கே
வாழ்ந்ததையும் மறந்து விட்டு
சிட்டாய்ப் பறந்தது - சோகம்
எனக்குள் திட்டாய் படிந்தது - ஆனாலும்
வருத்தமில்லை எனக்கு –
ஏனென்றால்
பட்டுச் சிட்டாய் எனக்கும் பனிமலராய் ஒரு மகள்
பட்டுச் சட்டை முதல் பட்டப்படிப்பு வரை
பழுதின்றி அளித்து பாங்காய் வளர்த்தேன்
பல்கலைகளில் வளம் பெற பார்த்து திளைத்தேன்.
பருவமெய்திய மகளுக்கு
பாங்காய் மணமுடித்து
பண்பாளன் ஒருவனுடன்
பட்டணமும் அனுப்பி வைத்தேன்.
சூள் கொண்ட செல்விக்கு
சுப நாளில் வளையிட்டு
பேறுகாலம் பெருகி நிறைவுறவே
பூரிப்பாய் என் வீடு புகுந்தாள் என் மகள்!
நான் பெற்ற மகளும் - அவளுற்ற கருவும்
பேணி வளர்ந்தனர் - அந்த
பெருநாளும் வந்தது!
சிறகில்லா ஒரு தேவதை - என் இல் நாடி
சிசுவை வந்தது! - அந்த
சந்தன பொம்மை எம்மை
சதிரடச் செய்தது!
அந்தப் பறவையின் அழகுக்குஞ்சினை
தொடவே வழியில்லை - தூர நின்று ரசித்தேன்
ஆனால் -
என் ரத்தத்தின் ரத்தம் தந்த ரத்தினத்தை
தொட்டுத் தூக்கினேன்
தோளில் சுமந்தேன்
வாயார முத்தமிட்டு
'வண்ணமயிலே' எனக் கொஞ்சினேன்!
முகிழ்ந்த மொட்டு - இந்த
மலர்ந்த சிட்டு
வித்திட்டவனுக்கும்
விளைவித்தவளுக்கும் தானே!
சட்டென ஒரு நாள் எனை விட்டு
பட்டணம் சென்றது -
கூடுதானா என் வீடு?
இல்லை!
கூடு விட்டு அன்று சென்ற
குஞ்சும் பறவையும் - அந்த
கூடு நினைக்கவில்லை - என்
வீடும் நினைப்பதில்லை
ஆனால்...
என் வீடு விட்டுச் சென்ற மகளும் - அவள்
விளைவித்த பெருநிதியும் - இந்த
வீட்டை மறக்க மாட்டார்கள் - என் மனதின்
பாட்டையும் மறக்க மாட்டார்கள்!
மீண்டும் மீண்டும் வருவார்கள் - நான்
மாண்டு போகும் நாள் வரையும்
வந்து வந்து போவார்கள் - நானும்
மகிழ்வேன் மகிழ்வேன்
மறுபடியும் மறுபடியும் மகிழ்வேன்!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.