Saturday, August 14, 2021

Movie Review - Sarpatta Parambarai


 

பொதுவாக இந்திய திரைப்படங்களை விட ஆங்கிலப் படங்களே நான் அதிகம் காண்பது வழக்கம். காதல் என்ற பெயரில் காமத்தையும், ஆக்ரோஷம் என்ற பெயரில் அபத்தமான கோமாளித்தனங்களையும் மட்டுமே காட்டி வருவதாலேயே பெரும்பாலான படங்களின் சுவரொட்டிகளைக் கண்டால் கூட ஒரு வெறுப்புதான்  தோன்றும் எனக்கு. அதற்காக நான் ஏதோ அறிவுஜீவி என்று என்னை நினைத்துக் கொண்டிருப்பதாக நீங்கள் எண்ண வேண்டாம். ஏனென்றால் எனக்கும் தெரியும் நான் அப்படி ஒன்றும் அறிவுடைய ரசிகனும் அல்ல. ஆங்கிலப் படங்களில் கூட அடிதடி அதிகமான 'action' வகை படங்களே நான் அதிகம் காண விரும்புபவை.

ஆனால் சமீப காலமாக, ஒவ்வொரு மொழியிலும் உள்ள நல்ல படங்களைத் தேடித் தேடி நான் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். அந்த முறையில், அண்மையில் ஒரு நண்பர்  Facebook-ல் 'சார்ப்பட்டா பரம்பரை' படத்தில் இருந்து ஒரு காட்சியை பகிர்ந்திருந்ததைக் கண்டேன் . சில நிமிடங்களே ஆன அந்த ஒரு காட்சியிலேயே ஒரு உத்வேகமும் விறுவிறுப்பும் நிறைந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. ஒரு ஆவலோடு அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இது ஒரு வழக்கமான படமல்ல என்பது மட்டும் எனக்கு நிச்சயமானது.

ஏகலைவனுக்கும், துரோணருக்குமானது போல ஒரு பந்தம் ஏழை கபிலனுக்கும், குத்துச்சண்டை வாத்தியார் ரங்கனுக்கும். ஆனால் இந்த வாத்தியார் துரோணரைப் போல அயோக்கியத்தனமாக  கட்டை விரலை வெட்டித்தர சொல்பவரில்லை. கபிலனின் தந்தை பெரிய குத்துச்சண்டை வீரனாய் இருந்து கடைசியில் ரௌடி ஆகி இறந்தது போல கபிலனும் ஆகி விடக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணமும் அவர் கபிலனை ஒதுக்கி வைக்க ஒரு காரணம். ஆனால் ஒரு முக்கியமான குத்துச்சண்டை போட்டியின் போது ரங்கனின் சார்ப்பட்டா பரம்பரை வீரர், எதிரணியான இடியாப்பப் பரம்பரை அணியின் முக்கிய வீரரிடம் தோற்றுப் போக, பழைய பகை காரணமாக ரங்கன் அவமதிக்கப்படுகிறார். அது கண்டு பொறுக்க முடியாமல் கபிலன் போன்ற ரங்கனின் விஸ்வாசமான சீடர்களும், அணியினரும் ஒரு இறுதி போட்டிக்கு சவால் செய்கின்றனர். சந்தர்ப்பங்களும் சூழலும் சார்ப்பட்டா பரம்பரை சார்பில், இதுவரை மேடையே ஏறாத, யாராலும் பெரிதாக எண்ணப்படாத கபிலனை, இடியாப்பப் பரம்பரையின் இரண்டு முக்கியமான வீரர்களுக்கு எதிராக களம் காண வைக்கின்றன. கபிலன் வென்றானா? ரங்கன் வாத்தியாரின் மானம் மீண்டதா என்பது தான் மொத்தப் படத்தின் கதை. இதனூடே, 1970களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், அந்தக் காலங்களில் தலைவிரித்தாடிய சாதீயக் கொடுமைகளும் சேர்த்துப் பின்னப்பட்ட  ஒரு அழகான கதைதான் இந்த 'சார்ப்பட்டா பரம்பரை'.

தமிழ் சினிமா நிறைய நடிகர், நடிகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்தது வரலாறு. அந்த வரிசையில் பசுபதி நிச்சயம் இடம் பெறுவார். ஒரு திறமைவாய்ந்த நடிகனை, வெறுமே வில்லனாகவும், துணை நடிகராகவும் மட்டுமே பயன்படுத்தி  முடக்கி வைத்தது என்ன ஒரு கயமைத்தனம்! வடசென்னையின் பேச்சுவழக்கும், வாழ்க்கையின் அனுபவங்கள் பல நிறைந்த ஒரு முதிர்ச்சியும் காட்டி, பசுபதி இங்கு ரங்கன் வாத்தியாராகவே வாழ்ந்திருக்கிறார். அடுத்தது ஆர்யா. ஏற்கனவே 'நான் கடவுள்' படத்திலேயே அவர் தனது  திறமைக்கு ஒரு  கோடிட்டுக் காட்டியிருந்தாலும் அதன் பின் வந்த பல படங்கள் வெறும் கணக்குக்கும் காசுக்கும் மட்டுமே ஆனவை. ஆனால் ஆர்யா இந்தப் படத்தில் திரை முழுக்க நிரம்பியிருக்கிறார். கலையரசன், சந்தோஷ், ஜான் விஜய், ஷபீர், அனுபமா, ஜான் கொக்கன், துஷாரா என்று பல நடிகர்களும் தம் பாத்திரங்களைக் கச்சிதமாக செய்திருந்தாலும், படம் பயணிப்பது முழுக்க பசுபதி மற்றும் ஆர்யா தோள்களில் தான்.

படத்தினூடே இயக்குனர் தனக்கே உரித்தான பாணியில் அம்பேத்கர் சுவரொட்டிகளையும், புத்தர் சிலைகளையும், மற்றும் பல சாதி அடையாளங்களையும் புகுத்தியிருப்பது நிறைய பேருக்கு நெருடலைத் தரலாம். ஆனால் இந்தக் கதை வெறும் குத்துச்சண்டை போட்டியை மட்டுமே காட்டுவதற்கில்லை. அந்தக் காலகட்டங்களில் தலைவிரித்தாடிய சாதிப் பிரச்சனை பற்றிக் கூடத்தான். எனக்கே கூட சமயங்களில் இவர் ஏன் இன்னும் 'கீழ் சாதி - மேல் சாதி' என்று ஆறத் தொடங்கியிருக்கும் ரணங்களை நோண்டி எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று சமயத்தில் ஒரு கோபம் வரும். ஆனால் அப்போதெல்லாம் 'நீ மலம் அள்ளவும், பிணம் புதைக்கவும், தோல் தைக்கவும், அழுக்கும் குப்பையும் சுத்தம் செய்யவும் மட்டுமே படைக்கப் பட்ட இழிபிறப்பு. நீ சக மனிதப் பிறவியாக மதிக்கப் படக் கூட லாயக்கில்லை' என்று சொல்லிச் சொல்லி, பல தலைமுறைகளாக செருப்பும் சட்டையும் கூட அணிய அனுமதிக்கப்படாமல், விடிவு வரும் என்று நம்பி வாழ்ந்து இருட்டிலேயே இறந்து போன நம் சக மனிதர்களின் தேற்றப் படாத அழுகைகளும், ஆற்றப்படாத கோபங்களும் ஒரு நொடி கண்முன் வந்து என்னை தலை குனிய வைக்கின்றன. இன்னும் கூட, இந்த அறிவுசார் தமிழ் மண்ணில் 'தாழ்த்தப்பட்டோர்' என்று சொல்லி நம் சக மனிதர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும் கொடுமைகள் நடந்துகொண்டு இருப்பதைக் கண்டால், இயக்குனர் இது போல இன்னும் ஓரிரு திரைப்படங்களாவது எடுக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

வேகத்திலும், ஆக்ரோஷத்திலும் இந்தப் படம் 'Rocky' வரிசைப் படங்களுக்கு இணையென்று சொன்னால் அது மிகைப்படுத்தல் ஆகாது. ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்கக்கூடிய படம் இந்த 'சார்ப்பட்டா பரம்பரை'!    

AK
             

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Happy New Year 2024!

As the first Sun of 2024 went back home, I was busy preparing my new diary and journal, packing off the old ones to their crammed space insi...