Monday, May 8, 2017

பாரதிக்கா சாதிப்பற்று?

நேற்று இரவிலிருந்து மனதை பிசைந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு இது. இதை என் எழுத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தி மனதை தேற்றிக் கொள்ளாவிட்டால் இந்த வேதனை குறையாது என்பதால் மட்டுமே இதை எழுதுகிறேன். யாரையும் பற்றி விமர்சிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல.

காந்தியை இழிவாகப் பேசுவது அறிவுக்கான ஒரு அடையாளம் என்பது போல் ஆகி விட்ட காலம் இது. ஒரு சமயம் வரை அவரது நிறை குறைகள் இரண்டையுமே எடுத்துக் காட்டி அவருக்கு பரிந்து பேசிப் பேசி, பின் சலித்துப் போய் நானும் இவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். ஆனால் இப்போதைய இலக்கு மாறிவிட்டது போலும். இப்போது இந்த அறிவு ஜீவிகள் பெருங்கவி பாரதியிடம் குறை காண ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு இலக்கிய விழாவில் முக்கிய பேச்சாளர் ஒருவர் பேசும்போது 'பாஞ்சாலி சபதத்தில்' இருந்து ஒரு வரியை சுட்டிக்காட்டி அது பாரதியின் சாதி மேலாதிக்க எண்ணங்களை குறிப்பதாக பேசினார்.

அவர் சொன்ன வரி இதுதான் -
"வேள்விப் பொருளினையே - புலைநாயின் முன்
மென்றிட வைப்பவர் போல"

இதில் அவர் வசதியாக முதல் வரியை மட்டும் சொல்லி, புலையர்கள் என்பவர்கள் கேரளத்தை சார்ந்த ஒடுக்கப்பட்ட சாதியினர் எனவும், பாரதி அவர்களை இழிவுபடுத்தி எழுதி இருப்பதாகவும், அதைச் சொன்னால் 'பாரதி பக்தர்கள்' ஒப்புக்கொள்ள மாட்டார்கள் எனவும் ஏளனம் தொனிக்கவே பேசினார்.

கோபத்துடன் அவருக்கு பதில் சொல்ல எழுந்த நான், ஏதோ ஒரு தயக்கத்தில் அமர்ந்து விட்டேன். ஆனால், நேற்று இரவு முதல் மனது மிகவும் வருந்திக்கொண்டிருக்கிறது. அந்தக் கவிஞனைக் கூடவா நீங்கள் வசை பாடத் தொடங்கி விட்டீர்கள்?!

புலையர் என்பது வேட்டைத் தொழில் செய்பவர்களைக் குறிக்கும் ஒரு வார்த்தை. வேட்டையாடுபவர்கள் எப்பொதும் நாய்களை உடன் வைத்திருப்பார்கள். அந்த நாய்களின் வேலையே வேட்டையாடப்படும் மிருகங்களை விரட்டிப் பிடிக்க உதவுவதும், வீழ்த்தப்பட்ட மிருகங்களை வாயில் கவ்வி எடுத்து வருவதும் தான். பொதுவாக வீட்டில் பூஜை அல்லது வேள்வி நடந்தால் அந்த உணவை முதலில் காக்கைக்கோ அல்லது பசுவுக்கோ தான் வழங்குவார்கள். யார் வீட்டிலும் பூஜை செய்த உணவை நாய்க்குப் படைக்க மாட்டார்கள். அதுவுமின்றி வேட்டை நாய் என்பது அசுத்தமாக கருதப்பட்ட விலங்கு. அதனிடம் யாரும் பிரசாதத்தை கொடுப்பார்களா?

'யாகப்பொருள் போல் புனிதமான பாஞ்சாலியை வேட்டை நாய்கள் போன்ற கவுரவர்கள் கையில் பந்தயம் வைத்து தோற்றான்' என்ற பாரதியின் சாதாரணமான உவமையை இதை விட மோசமாகத் திரித்துப்பேச முடியுமா என்ன??? ஜாதி வெறியும் பெண்ணடிமைத் தனமும் மேலோங்கிய காலத்தில் எம் பாரதி செய்த புரட்சிகளை இதை விடவா உதாசீனமாக உமிழ முடியும்?! இதே பாரதி ப்ராமணராக  இல்லாதிருந்தால் அவரது வார்த்தைகளுக்கு இப்படி தவறான ஒரு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

அய்யாக்களே, அறிவு ஜீவிகளே, நீங்கள் உங்கள் ஜாதித் தலைவரை எப்படி வேண்டுமானாலும் ஆராதியுங்கள், பேரறிவாளர்களாகப் போற்றிக்கொள்ளுங்கள், இந்து மதத்தையும் இழிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், பாரதி போன்ற ஒரு சில ஜீவன்களையாவது விட்டு வையுங்கள். என் போன்ற நிறைய பேர் சாதி மதங்களைத் தாண்டி மனித நேயம் பாராட்ட விழைவதற்கும், பெண்களை மதித்து வாழ விரும்புவதற்கும் பாரதி ஒரு காரணம். அவரை குறைநோக்கம் உடையவராகக் காட்டி உங்கள் தலைவர்களை மேம்படுத்திக் கொள்ள எண்ணுவது கயமைத்தனம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Book Review — Be More Bonsai, Mark Akins

During my school days a magician visited our school and taught us the art of Origami. Creating lively shapes out of plain notebook papers, h...