Saturday, April 9, 2022

Book Review - Aram, Jayamohan


 
 
ஒவ்வொரு முறை சொந்த ஊருக்குப் போகும்போதும், அதிகாலை இருள் நேரத்தில் ரயில்வண்டி ஊரை நெருங்க நெருங்க மனதில் இனம் புரியாத ஒரு உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதுவும் ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது  ஊர்ப்பெயர் தாங்கி நிற்கும் அந்த மஞ்சள் நிறப் பெயர்ப்பலகையை கண்டதும் ஏதோ குழந்தைப் பருவத்துக்கே திரும்பியது போல் ஒரு நிம்மதி தோன்றும். வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்களில் தங்கத்தொடங்கி கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகியும் இன்றும் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் இந்த அனுபவம் மட்டும் மாறுவதில்லை. நானும் பலமுறை யோசித்ததுண்டு - எத்தனையோ ஊர்கள் சுற்றி வந்தும் வசதிகளும் வட்டமும் குறைந்த இந்த ஊரின் மீது ஏன் இப்படி ஒரு பிடிப்பு, ஒரு ஒட்டு என்று. என் தாய் தந்தையர் இன்னும் இங்கே வாழ்ந்து வருவதாலா? நான் சிறு வயது முதலே பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊர் என்பதாலா? கல்வியும் நட்பும் காதலும் காமமும் ஆகிய எனது எல்லா உணர்வுகளும் முதலில் வேரோடி வளர இடம் தந்த நாற்றங்கால் என்பதாலா? இன்னும் இந்த ஊரில் 'இது என் சொந்த ஊர்' என்று ஒரு ஒட்டுறவு ஏற்பட என்ன காரணம்? நான் பயின்ற பள்ளி, வணங்கிய கோவில், அப்பா கை பிடித்து ஞாயிறு தோறும் சென்ற சந்தை, நண்பர்களோடு ஓடி விளையாடிய மைதானம், காதலியின் கையை முதலில் பற்றிய தெருமுனை, அம்மாவுக்கு முதலில் சொந்தக் காசில் பட்டுப்புடவை வாங்கித்தந்த கடை, பரிச்சயமான அன்னியர்கள் - இது மட்டுமா காரணம் அல்லது இன்னும் ஏதேனுமா என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பிக்கும்.      

 

தமிழில் புத்தகம் வாசிப்பதும் கூட அப்படி ஒரு அனுபவம் தான். பிற மொழிகளில் கவிதை முதல் கணிதம் வரை, அறிவியல் முதல் ஆதி மனிதம் வரை எல்லாமே படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழில் ஒரு புத்தகம் வாசிப்பது ஒரு தனியான  சுகம். என்னதான் ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறுசுவையில் உண்டு பஞ்சு மெத்தையில் படுத்தாலும், வீட்டுக்கு வந்து அம்மா சமைத்த ரசம் சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும்  சாப்பிட்டு தன் அறையில் தரையில் வெறும் பாய் போட்டுத்தூங்கும் அந்த சோம்பல் நிறைந்த சுகத்துக்கு எது ஈடு? அது போல ஒரு அமைதி கலந்த சொகுசு உணர்வு தமிழில் புத்தகம் படிக்கும் போது எப்போதுமே வருவதுண்டு. அதற்காக நான் ஏதோ பெரிய தமிழ் இலக்கிய ஆர்வலன் என்று நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம்.

 

நான் முதலில் தமிழில் முழுமையாகப் படித்த புத்தகம் என்றால் அது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தான். பத்தாம் வகுப்பு முடித்து கோடை விடுமுறையில் பொழுது போகாமல் புலம்பிக்கொண்டிருந்த சமயத்தில் என் அப்பா என் கைகளில் அந்த முதல் பாகத்தைக் கொடுத்து படிக்க சொன்னதன் விளைவு, அடுத்த ஓரிரு நாட்களில் அந்த முழுத் தொகுதியையும் படித்து முடித்திருந்தேன். கல்கியின் கற்பனை கலந்த வரலாற்றுப் புதினங்களுக்குப் பெரிய விசிறியும் ஆனேன். கல்கியைத் தவிர வேறு எழுத்தாளரும், பாரதி போல் வேறு ஒரு கவிஞரும் இருக்க வாய்ப்பே இல்லை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிப் போனேன். வழக்கம் போல் என் அப்பா தான் இப்போதும் என்னை வேறு திசைக்குள் திருப்பினார். சற்றே வாழ்க்கை புரிய ஆரம்பித்த தருணத்தில், அவர் சொன்னபடி ஜெயகாந்தன் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். ஊமை ராணியையும், கண்ணம்மாவையும் தாண்டி, எதிரில்  நிற்கும் நடக்கும் என் போன்ற சாதாரணர்கள், அவர்கள் வாழ்வில்  ஏற்படும் இன்பதுன்பங்கள், இன்னல் இடையூறுகள், சின்னச்சின்ன வெற்றிகள், வெறுமைகள் இது எல்லாவற்றையும் பிடரியில் அறைந்தாற்போல்  ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்னுள் பதித்துச் சென்றன. சற்றுமுன் சொன்ன பரிச்சயமான அன்னியர்கள் அனைவரையும் நிறுத்தி 'உங்கள் கதை என்ன? உங்கள் வாழ்க்கை ஒழுங்காக செல்கிறதா? நீங்கள் நலமா?' என்றெல்லாம் கேட்டு அளவளாவ விரும்பும் அளவுக்கு, சக மனிதர்களின், சாதாரணமானவர்களின் நிலையை கண் கொண்டு நிறுத்தியது ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தான்.

 

பின் ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, சுஜாதா, பாக்கியம் ராமசாமி என்றெல்லாம் படிக்கத்தொடங்கிய போதும் சமகால தமிழ் எழுத்தாளர்களோடு பெரிய பரிச்சயம் ஏற்படவில்லை. கதைகளையும் கவிதைகளையும் தாண்டி நான் அறிவைத் தேடி படிக்க ஆரம்பித்திருந்தது ஒரு காரணமென்றால் எனக்கு தமிழ் இலக்கிய அறிமுகம் செய்து வைத்த ஏன் அப்பா வயது மற்றும் வாழ்க்கை காரணமாக படிப்பதைக் குறைத்துக் கொண்டிருந்ததும் ஒரு காரணம். அவ்வப்போது சில தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பேச்சுவாக்கில் கேட்டாலும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. காரணம் அவை பெரும்பாலும் கற்பனை எழுத்துக்கள் பற்றியவை. அப்படி நான் ஒரு முறை கேள்விப்பட்ட பெயர் தான் 'ஜெயமோகன்'. அப்போது அவரின் 'விஷ்ணுபுரம்' நாவலை பற்றி எங்கும் ஒரு பேச்சு இருந்தது. அதுவும் அதில் இருந்த ஏதோ பிரச்சினைக்குரிய கருத்துக்கள் காரணம் என்று சொல்லப்பட்டதால் நான் அது பற்றி அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால்  ஓரிரு வருடங்களுக்கு முன், ஒரு இலக்கியக் கூட்டத்தில் என்னை ஒரு நண்பர் பேச அழைத்திருந்தார். பேசிய மூன்று பேரில் நான் மட்டும் தி.ஜானகிராமன் பற்றிப் பேச, மீதி இருவரும் - இரண்டு பேருமே பெண்கள் - சமகால எழுத்தர்களைப் பற்றி பேசி முடித்தார்கள். அதில் ஒரு பெண் பேசியது ஜெயமோகனின் 'அறம்' புத்தகத்தில் வந்த 'சோற்றுக்கணக்கு' என்ற கதையைப்பற்றி. அந்தக் கதை  பற்றி வேறு ஒரு சில நண்பர்களும் பின்னாட்களில் பேசக்கேட்ட பின் அந்த வருடம் வந்த என் தந்தையின் பிறந்த நாளுக்கு 'அறம்' புத்தகத்தையே பரிசாக அளித்தேன். நீண்ட காலமாய் அப்பாவின் அலமாரியில் இருந்த அந்த புத்தகம் சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது கண்களில் தென்பட, பொழுதுபோக்காய் ஓரிரு பக்கம் படிக்கத்தொடங்கி இன்று படித்தும் முடித்தாகிவிட்டது.

 

இது பன்னிரண்டு மனிதர்களின் கதை. உண்மை மனிதர்களின் கதை. சற்றுமுன் சொன்னேனில்லையா, ஒவ்வொரு பரிச்சயமான அந்நியர்களிடமும் போய் அவரது வாழ்க்கை நிலவரம் பற்றி கேட்டறியத் தூண்டும் எழுத்துக்கள் என்று, அது போன்ற கதைகள் இவை. புனைக்கதைகள் அல்ல, ஏதோ ஒரு தருணத்தில் இந்த எழுத்தாளரின் வாழ்வில் வந்து பினையப்பட்ட வேறு சில மனிதர்களின் கதை. 'அறம்' உண்மையிலேயே தர்மத்தை உயரக்கொண்டு போய் நிறுத்தும் கதையென்றால், 'வணங்கான்' சமூகத்தின் அதர்மங்களை எதிர்த்து நின்றவரின் கதை. பெண்ணுரிமை ஏதோ உடுப்பிலும் மது குடிப்பிலும் மட்டுமே என்றான இந்த காலகட்டத்தில், மிக மோசமான கொடுமைகளைக்கூட சகித்துக் கொண்டு தனக்குள்ளேயே புழுங்கிச் செத்த பல்லாயிரம் பெண்களின், பழைய தலைமுறை தெய்வங்களின் பாட்டை விவரிக்கும் 'தாயார்பாதம்'.  ஜீவகாருண்யம் அனைத்து உயிர்களுக்கும் தான் என்று காட்டிச்சென்ற ஒரு அற்புதமான மனிதனின் கதை 'யானை டாக்டர்'. வலது கை கொடுப்பதை இடது கை அறியாது தான தர்மங்கள் செய்வது எப்படி என்பதை உணர்ச்சி பொங்க சொல்லித்தரும் 'சோற்றுக்கணக்கு'. சமூகநீதியும் இட ஒதுக்கீடும் ஒரு பிற்போக்கான செயலாகக் கருதப்படும் இந்த கால மக்களுக்கு அதன் பின்னால் இருக்கும் காரணங்களையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் 'நூறு நாற்காலிகள்'. ஒரு சக மூத்த எழுத்தாளரின் இறுதிநாட்களையும் இயல்பையும் விவரிக்கும் 'பெருவலி'. மதமாற்றம் ஒரு பிரச்சினைக்குரிய நிகழ்வாக இன்று இருக்கையில், மதத்தின், மத விசுவாசத்தின் உண்மையான தாத்பரியத்தை கூறும் 'ஓலைச்சிலுவை'. கலையின் மேன்மையையும் ஆண்-பெண் உறவுகளின், அது குறித்த உணர்வுகளின் ஆழ அகலங்களை அளக்க எண்ணும் 'மயில் கழுத்து'. மனிதர்கள் உறவுகளைத் தாண்டி, சமூக வரைமுறைகளைத் தாண்டி ஒருவர் மீது ஒருவர் வைக்கக்கூடிய பாசம் மற்றும் பக்தியின் பலாபலன்களை சொல்லும் 'மத்துறு தயிர்'. பொது நலனுக்கு உண்மையாகப் பாடுபடுபவர்களை எல்லாம் பைத்தியம் போல நடத்தியும், சமூக நலனைக் குப்பையாக எண்ணி சுயநலம் பேணி வாழ்வோரை பெருமாண்பு கொடுத்தும் வாழ வைக்கும் இந்த முட்டாள் சமூகத்திற்கு ஒரு செய்தி போல 'கோட்டி'. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பழந்தமிழ் சொல்லுக்கேற்ப வாழும், வாழ விரும்பும் பிற தேசத்து மனிதரின் கதையாய் 'உலகம் யாவையும்'. இந்தப் பன்னிரு கதைகளும் பன்னிரு பாடங்கள். புத்தகம் வெறுமே சொற்கள் நிறைந்த காகிதங்களின் தொகுப்பல்ல, அவை படிப்பவரின் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்கி, சமுதாய  மாறுதல்களுக்கு வழிகாட்டும் ஆயுதங்கள் என்று உணர்ந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும்.

 

கற்பனைக்கதைகளையும், காதல் கவிதைகளையும் தாண்டி நான் கற்கத் தொடங்கும் போது, சுற்றி நடக்கும் அவலங்களையும் சமூகச் சிக்கல்களையும் எளிய நடையில், இயல்பான சொல்வழக்கில் எனக்கு கற்றுத்தந்த முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன். மனித மனங்கள் குறித்தும், அவற்றின் இருண்ட பக்கங்கள் குறித்தும் நான் முதலில் கற்றது அவர் கதைகளில் இருந்துதான். அழுகிய ஏதோ ஒன்றை நம் முகத்தில் வீசி, முதலில் குடலைப் புரட்ட வைத்து பின் அதிலிருந்து பரிசுத்தமாகும் வழியையும் சொல்வது போல், மனமாசுக்களைப் பற்றிப் பேசி, பின் அதிலிருந்து மீண்டு மனிதன் தன் மேன்மையை உணரவும் செய்வதுபோல் இருக்கும் ஜெயகாந்தன் எழுத்துக்கள். அந்த வகையில் என்னை மிகவும் பாதித்தவை 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது' மற்றும் 'நான் இருக்கிறேன்' சிறுகதைகள். அது போல் மிக நீண்ட காலம் கழித்து என் இருப்பின் ஆழம் வரை சென்று என்னை உலுக்கியெடுத்த எழுத்துக்கள் இவை. குறிப்பாக 'தாயார்பாதம்' மற்றும் 'நூறு நாற்காலிகள்' என் ஆயுள் வரைக்கும் கூட வரப்போகும் அனுபவங்கள். 

           

புத்தகத்தை வாசித்து முடித்து புத்தக அலமாரியில் வைக்கும்போது தோன்றிய எண்ணம் - புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் காமத்தை விடவும் பரவசம் அளிக்கக்கூடிய, கடவுளை விடவும் ஆன்ம நிறைவு தரக்கூடிய ஒரு அனுபவத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அறம், ஓர் அனுபவம்!

Happy New Year 2024!

As the first Sun of 2024 went back home, I was busy preparing my new diary and journal, packing off the old ones to their crammed space insi...