Image Source - Google |
அள்ளிப் பருகி
சூல் கொண்ட கார்மேகம்
சுழன்றோடி சென்றது!
மேகத்தின் வண்ணத்தில்
மோகித்த குளிர்வாடை அதில்
மோதித் திளைத்ததினால் மாறி
முத்தாய் முகிழ்ந்து சொரிந்தது!
வான் பார்த்து வாடி
வனப்பிழந்த பசும்புல்
மேனி சிலிர்த்தது
மெல்ல நிமிர்ந்தது!
நாள் பார்த்து, காய்ந்த
நன்னிலம் பார்த்து நலிந்த விவசாயி
தேனாய் மழை பொழிய
தீரா உவகையுடன்
எருதோடு ஏர் பூட்டி
எண்ணற்ற வலு கூட்டி
கடைமடை வரை காட்டை
கடிதாய் உழுதான்
கோடை பொறுக்காமல்
குமுறி தவித்தோர்கள்
வாடையோடு நல்வருணன்
வாரிப் பொழிந்ததனால்
ஓடைக் குளிர் நீரில்
ஆடிக் குளித்தார்கள்
ஆடிப் பெருக்கென்று
பாடிக் களித்தார்கள்.
பாலாய் வழிந்தோடி
பாய்ந்து பொழிந்து விட்டு
பகட்டும் பவிசுமின்றி
நூலாய் இளைத்து விட்ட
சீராடும் அருவியெல்லாம் நீர்
சீறிப் பாய்ந்து வர
நீராடும் உறவுகளால்
நிரம்பிச் சிரித்தன!
ஊற்றுக்கும் நீரின்றி
உலர்ந்து உறைந்திட்ட
ஆற்றுப் படுகையெல்லாம்
அமுதாய் வழிந்தோட
சோற்றுக்கென மற்றோர்
மாற்றுத்துணிகளை மருவின்றி
தோய்த்தெடுக்கும் தொழிலாளி
வேர்த்து விறுவிறுத்து விரைவாய்ப் பணி மேவ
காற்றுக்கெனவும் – கண்
காட்சிக்கெனவும் – மலர்
தோட்டம் துரவென்றும்
தோகை செடியென்றும்
பார்த்துப் பார்த்து அதைப்
பாங்காய் வளர்ப்போரும்
பாத்தி சரி செய்து
பதமாய் சமன் செய்து
நீர்ப்பெருக்கை அதில்
நிறைப்பதோடல்லாமல்
நீரூற்றும் சமைத்து
நிழல் குடையுமமைக்க
பட்டு விட்ட தருவெல்லாம் - நீர்
பட்டு விட்ட தருணமே
பட்டென்று தளிர் விட்டு
படர்ந்து பனித்தனவே!
ஏரி குளமெல்லாம்
எவ்வளமுமில்லாமல்
காய்ந்து சருகாகி
கடிதாகி போகையிலே
மாரி பெருக்கெடுத்து
மடையெல்லாம் நிறைகையிலே
வான் பறவை மட்டுமல்ல
வண்ணமயமான - நீர்
வாழ்கின்ற ஜீவன்களும்
பேருவகைப் பெருக்கெடுக்க
சீரோடு பெருகினவே -
சிறப்பெல்லாம் எய்தனவே!
ஆறு குளம் ஏரி
ஆழ்கிணறு அகழி வரை
அலை அலையாய் நீர் புரள
அதனாலே வளம் பெருக
எங்கெங்கும் பசுமை
ஏதுமில்லை வெறுமையென
எவ்வளவோ சீர் பெருகி
அவ்வளவும் சிறக்கையிலே -
பாருக்கு நற்பயனை
பரிசளிக்கும் பருவ மழை
பதமாய்ப் பொழியாமல் – சற்றே
பலமாய்ப் பெருக்கெடுத்து
வீதி நிறைத்த வெள்ளம்
ஆறு சென்றடைந்து
அலை மீறிப் பாய்கையிலே
அணை மீறிப் போகையிலே
ஆழ்கடல் நிலை மாறி
அலையெல்லாம் மேலேறி
ஆங்காங்கே பேராழி
அழிவாகி அமைகையிலே
போற்றித் துதித்து
புகழ் பாடி மகிழ்ந்தோரும்
தீங்கு விளைந்ததினால்
தீராத சினம் கொண்டு
தூற்றி வசை பாடி
தூவென்று இகழ்ந்தனரே -
இரண்டும் எனக்கொன்றென்று மாறி
இனிதாய் நகைத்தனளே!
மாரி போல் மாந்தரெல்லாம்
போற்றலும் தூற்றலும்
பொதுவென்று கொண்டால்
மாற்றமுண்டு ஏற்றமுண்டு!
கிருஷ்ணாஜி